தமிழகத்தை சோமாலியாவுடன் வைகோ ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது; தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
தமிழகத்தை சோமாலியாவுடன் வைகோ ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்து உள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகிற 5ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும். வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
வேலூர் தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். தேர்தல் கூட்டத்தில் பேசிய வைகோ, பாஜக அரசுக்கு பாடம் கற்பிக்க திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார். தமிழகத்தை சோமாலியா, நாகசாகியுடன் ஒப்பிட்டும் பேசினார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுபற்றி அளித்த பேட்டியில், வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது. சோமாலியா, நாகசாகியுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும்.
வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை. பாமர மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story