‘வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களியுங்கள் ’ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
அ.தி.மு.க. அரசை மேலும் வலுப்பெறச் செய்ய வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களியுங்கள் என்று அத்தொகுதி வாக்காளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் போனதற்கு, தி.மு.க.வினரால் நடத்தப்பட்ட பல்வேறு தில்லுமுல்லுகள் தான் என்பதை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
தி.மு.க. என்றாலே ஜனநாயக நெறிகளுக்கு விரோதமாக செயல்படும் ஒரு வன்முறை, ஊழல் இயக்கம் என்பது, எம்.ஜி.ஆர். நமக்கு சொல்லிச் சென்ற உண்மையாகும். தீயசக்தியின் இருப்பிடம், ஊழலின் ஊற்றுக்கண், குடும்ப அரசியலின் குறியீடு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் அராஜகக் கும்பலின் அரசியல் மையப் புள்ளிதான் தி.மு.க. என்பதை, ஜெயலலிதாவும் தனது 33 ஆண்டுகால அரசியல் வாழ்வில் மெய்ப்பித்து இருக்கிறார்.
பொய்யான வாக்குறுதிகளையும், பொறுப்பற்ற செயல் திட்டங்களையும் வாய் கூசாமல் அவிழ்த்துவிட்டு, அண்மையில் பெற்ற வெற்றியால் தமிழ்நாட்டை சீரழிக்க இன்னும் ஒரு வாய்ப்பு வந்துவிடும் என்று மனக்கோட்டை கட்டியிருக்கும் தி.மு.க.வினரின் அராஜகப் போக்கை தடுத்து நிறுத்தவும், தி.மு.க. ஆட்சி என்றும் இருண்ட காலம், இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்பதை உலகுக்கு உணர்த்தவும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு தான் 5-8-2019 அன்று (நாளை) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டு மக்களை தன் சொந்த, பந்தங்களாகப் போற்றி மதித்து, தன் வாழ்வை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவவாழ்வு வாழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எண்ணற்ற சோதனைகளையும், தடைகளையும் தாண்டி இன்று அ.தி.மு.க. ஆட்சி, மக்கள் விரும்பும் மகத்தான நல்லாட்சியாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், தமிழ்நாட்டு மக்களுக்கான நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை எப்படி செயல்படுத்தினார்களோ அதைப்போன்றே, ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசும், உங்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும், மக்கள் நலன் கருதி புதிதாக என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும், சாதிமத பாகுபாடு இன்றி நாம் எல்லோரும் இறைவனின் படைப்புகள், “எல்லோருக்கும் இங்கே உண்டு சமநீதி, யாருக்கும் இல்லை இங்கே அநீதி” என்ற உறுதியான கொள்கை நிலைப்பாடு உள்ள இயக்கம் தான் அ.தி.மு.க. என்பதை மறவாதீர்கள்.
5-8-2019 அன்று நடைபெறவுள்ள வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு, அ.தி.மு.க. சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அ.தி.மு.க. அரசை மேலும் வலுப்பெறச் செய்யுமாறு, வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காள பெருமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story