திருச்சி நகைக்கடை முக்கிய கொள்ளையன் முருகனை பிடிக்க ஆந்திரா, கர்நாடகாவில் தனிப்படை போலீசார் முகாம்


திருச்சி நகைக்கடை முக்கிய கொள்ளையன் முருகனை பிடிக்க ஆந்திரா, கர்நாடகாவில் தனிப்படை போலீசார் முகாம்
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 10:27 PM GMT)

திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டிய முக்கிய கொள்ளையன் முருகனை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகாவில் முகாமிட்டு உள்ளனர்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை கொள்ளை கும்பல் சுவரில் துளை போட்டு கடைக்குள் புகுந்து 30 கிலோ எடை கொண்ட தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை அள்ளி சென்றனர். கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் காட்சி கடைக்குள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, மோட்டார் சைக்கிளில் நகையுடன் சென்ற கொள்ளையன் மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினான். பின்னால் அமர்ந்து இருந்த மற்றொரு கொள்ளையன் சுரேஷ் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தப்பி ஓடினான். மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் லலிதாஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது.

தொடர்ந்து மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

லலிதா ஜூவல்லரி கொள்ளையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. திருவாரூர் முருகன் 2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவன் ஆவான். இவன் மீது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. சாதாரண குடும்பத்தில் பிறந்த முருகன், பள்ளியில் படித்தபோது, சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.

முருகனுக்கு 4 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர். முருகனுக்கு மஞ்சுளா, மகி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முருகனின் அக்காள் மகன் தான் சுரேஷ் (28). சினிமா படங்களை பார்ப்பது முருகனுக்கு பிடித்த பொழுதுபோக்கு. எப்படியாவது திரைப்படம் தயாரித்து விட வேண்டும் என்பது அவருடைய ஆசை. இதேபோல் சுரேஷுக்கு சினிமா கதாநாயகனாக வேண்டும் என்பது கனவு. பெங்களூருவில் கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலில் கொள்ளையை அரங்கேற்றிய முருகன், பல்வேறு திரைப்படங்களை பார்த்து தான் வித, விதமாக கொள்ளையடிக்கும் முறைகளை கற்று கொண்டான்.

சினிமாத்துறையில் சிறந்த படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முருகன் வீடு எடுத்து தங்கி இருந்தார். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வங்கிகளில் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை காஞ்சீபுரத்தில் உள்ள அந்த வீட்டில் தான் முருகன் பதுக்கி வைத்து இருந்தான். கடந்த 2015-ம் ஆண்டில் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்திய தெலுங்கானா போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது முருகன் கைது செய்யப்பட்டான். இதன்மூலம் தொடர்ச்சியாக சினிமா தயாரிக்கும் முருகனின் கனவு தகர்ந்தது.

துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட எந்த ஆயுதங்களையும் எடுக்காமல், யாரையும் தாக்காமல் லாவகமாக கொள்ளையடிக்கும் முருகனின் சாமர்த்தியத்தையும், அவர் மீதான 100-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளின் பின்னணி குறித்த தகவல்களையும் அறிந்த தனிப்படை போலீசார் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். தற்போது திருச்சி லலிதா ஜூவல்லரியில் கைவரிசை காட்டி விட்டு தப்பிய கொள்ளையன் முருகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முருகனின் கூட்டாளிகள் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் அடைக்கலம் தேடி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இதனால் திருவாரூர் முருகனை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.

Next Story