தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் - மு.க.ஸ்டாலின்


தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Oct 2019 5:19 AM GMT (Updated: 8 Oct 2019 5:19 AM GMT)

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட  சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகம் வரும் சீன அதிபர் வருகையையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.  அதில்  அவர் கூறி இருப்பதாவது:-


இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் மேன்மைமிகு அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் அவர்கள் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன்.

சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு அவர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு லட்சக் கணக்கான மக்களுடன் சீனப் பெருந் தலைவர் மாவோ அவர்கள் நடத்திய மகத்தான பேரணியை அடுத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949 ஆம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது.

உழைக்கும் வர்க்கம் முன்னின்று தீரத்துடன் நடத்திய அந்த மாபெரும் புரட்சியின் எழுபதாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை, கடந்த அக்டோபர் 1ஆம் நாள் நடத்திவிட்டுத் தான் சீன அதிபர் அவர்கள் தமிழகம் வருகிறார்கள். அதே 1949 ஆம் ஆண்டுதான், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமும் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும் தனது 70வது ஆண்டு விழாவைப் போற்றிக் கொண்டு இருக்கிறது.

"ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்று, மானுடத்திற்கு அரிய தத்துவத்தைத் தந்த மாவீரர் மாவோ; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் முத்தான தமிழில் ஏற்றிப் போற்றிப் பாராட்டிப் புகழப்பட்ட புரட்சி நாயகர் மாவோ; அவர் வழியில் புயலாக வீசிய அந்த சீனப்புரட்சிதான், அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் உருவான சமூக, அரசியல்,பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.

அத்தகைய தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது உண்மையில் பெருமைக்குரியதாகும்.

தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல; குடியரசு காலத்துக்கும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடர்கிறது.

கி.மு.காலக்கட்டத்திலேயே சீன நாணயங்கள் இருந்த இடம், நம்முடைய தஞ்சை மண். சீன தேசத்துக்கு வர்த்தகம் செய்த தமிழ்மன்னர் மாவீரர் இராசராச சோழன்.

ஏற்றுமதி இறக்குமதித் தொடர்புகள் பலப்பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னதாகத் தமிழகத்துக்கும் சீனாவுக்கும் உண்டு. அதனால்தான் சீனப் பயணியும் புத்தத் துறவியுமான யுவான் சுவாங் தமிழகத்தைக் காண வந்தார். அவர் வந்து சென்ற மிக முக்கியமான ஊர், பல்லவர் காலத் தலைநகரமான காஞ்சிபுரம். அந்த மாவட்டத்துக்குத்தான் இன்றைக்கு சீன அதிபர் அவர்கள் வருகிறார்கள்.

தமிழகத்தின் கலைநகரம் மாமல்லபுரம். கல்லில் கலைவண்ணம் கண்டு, கவிதைகளாகச் செதுக்கிய ஊர். பல்லவ நாட்டின் மிக முக்கியமான துறைமுகம் இருந்த கடற்கரை நகரம் அது.

மாமல்லபுரத்தை உலகப் பண்பாட்டுச் சின்னமாகக் கருதி 'யுனெஸ்கோ' விருது தந்துள்ளது.

இந்தியத் தொல்லியல் நகரங்களில் தலையாயது மாமல்லபுரம்.

சிற்பங்கள், மண்டபங்கள், தேர்கள், ரதங்கள், கட்டுமானக் கோவில்கள், கடற்கரைக் கோவில், புடைப்புச் சிற்பங்கள் என சிலை நகர் அது. அக்கலை நகருக்குத்தான் சீன அதிபர் அவர்கள் வருகிறார்கள்.

உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரத் தக்கது என்ற அடிப்படையிலும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவரை , திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது.

இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே" என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்றும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story