பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
புதுடெல்லி,
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது பாமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற்ற பாமக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள போதிலும் அரசின் திட்டங்களாகிய சேலம் எட்டுவழிச்சாலை, ஷேல் கேஸ் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு தங்களது கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்த முன்னறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமரை சந்தித்த பிறகு ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பிரதமருடனான சந்திப்பின் போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். மேலும் காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் பாமக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.
மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story