உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்


உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 11 Nov 2019 5:15 AM IST (Updated: 11 Nov 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்

* பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* ஊழல்களின் உறைவிடமாகவும், மக்களை வாட்டி வதைத்துவரும் அ.தி.மு.க. ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* ஊழலில் திளைத்திடும் அ.தி.மு.க. அமைச்சர்களை வருமான வரித்துறை சோதனை மற்றும் உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* பா.ஜ.க அரசின் பல்வேறு தமிழ்-தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணைபோவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டிட பாடுபட வேண்டும்.

7 பேர் விடுதலை

* பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை அ.தி.மு.க. அரசு வலியுறுத்த வேண்டும். அவர்களை கவர்னர் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

* சென்னையின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மெகா குடிநீர்த் திட்டங்களையும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.

* திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்திட வேண்டும்.

* கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பின் மீதான மக்களின் சந்தேகத்தை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும்.

காற்று மாசு பாதிப்பு

* சென்னையை காற்று மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

* நதிநீர் இணைப்புத் திட்டங்களை அ.தி.மு.க. அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

* காஷ்மீரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும்.

கீழடி அகழாய்வு

* கீழடி அகழாய்வு பணியை தொய்வின்றி நடத்தி அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

* பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்திட வேண்டும்.

* புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். கல்வி அதிகாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானங்கள் சிலவற்றை நிறைவேற்றினார். அதன் விவரம் வருமாறு:-

சிறப்பு தீர்மானங்கள்

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்புகள் சிதைக்கப்படுவதை தி.மு.க. ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. நாட்டில் மாநிலங்கள், மாவட்டங்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் என பிரித்து ஒரே நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பா.ஜ.க. திட்டமிடுகிறது. இது கைவிடப்பட வேண்டும்.

22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்குவது போன்றவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மத்திய அரசில் தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு சிறப்பு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. 

Next Story