பஞ்சமி நில விவகாரம்: டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேட்டி


பஞ்சமி நில விவகாரம்: டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2019 11:15 PM GMT (Updated: 19 Nov 2019 11:03 PM GMT)

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

சென்னை,

சென்னையில் ‘முரசொலி’ அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் டாக்டர் ஆர்.சீனிவாசன் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக முரசொலி அறக்கட்டளை மேலாண் இயக்குனர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆட்சேபனை மனு தாக்கல்

இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ‘முரசொலி’ அறக்கட்டளை அறங்காவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நேற்று ஆஜராகி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகனிடம் ஆட்சேபனை மனுவை அவர் தாக்கல் செய்தார்.

அதில், ‘நில உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகார வரம்பினை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அரசியல் சட்டம் ஒப்படைக்கவில்லை. இப்பிரச்சினையில் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு தான் இருக்கிறது. அபகரிக்கப்பட்டதாக புகார் கூறப்படும் சொத்து குறித்த முகவரி, சர்வே எண் போன்ற எந்த தகவலும் இல்லாத தெளிவற்ற புகாராக இருக்கிறது.

அடிப்படையற்ற ஒரு புகாரை வைத்துக்கொண்டு சுற்றி வளைத்து விசாரணையை நடத்தக்கூடாது. எனவே இதனை தள்ளுபடி செய்ய வேண்டும். புகாரை அளித்தவர் மீது கூடுதல் செலவு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

நீங்கள் விசாரிப்பீர்களா?

பின்னர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள், எங்கள் மடியில் கனம் இல்லை என்பதால், தகுந்த ஆதாரங்களுடன் அதை நிரூபிப்பதற்காக வந்தோம். ஆனால் புகாரை கூறிய சீனிவாசன் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அடுத்து அரசின் சார்பிலும் அவகாசம் தேவை என்று கேட்டு விட்டு சென்றதாக ஆணையர் தெரிவித்தார்.

நான் அப்போது ஆணையரை பார்த்து, ‘வழியில் போகிற யார் புகார் கொடுத்தாலும் நீங்கள் விசாரித்து விடுவீர்களா? நான் கூட இப்போது பிரதமர் வாழ்கிற வீடு பஞ்சமி நிலம், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் வசிக்கிற இடம் பஞ்சமி நிலம் என்று சொன்னால் நீங்கள் விசாரிப்பீர்களா?’ என்று கேட்டேன். தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகம் இருக்கிற கமலாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்றால் அதை நீங்கள் விசாரிப்பீர்களா? என்று எங்கள் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கேட்டார். அதற்கு அவரால் முறையாக எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அவதூறு வழக்கு

பஞ்சமி நிலமா இல்லையா? என்று தேடுவதற்கு அரசாங்கத்திற்கு ஒரே ஒரு மணி நேரம் போதும். ஆனால் நீங்கள் சம்மன் அனுப்பி எத்தனை நாட்கள் ஆகிறது. இன்னுமா கிடைக்கவில்லை. மு.க.ஸ்டாலினின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்கள், முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டை சொன்னார்கள். நிரூபிப்பதற்கு ஆதாரங்களை கொடுத்திருக்கிறோம். இதுவரை அவர்கள் தரப்பில் ஆதாரங்களைக் கொடுக்க தெம்பும் இல்லை. திராணியும் இல்லை.

சீனிவாசன் மீது நாளை (இன்று) அவதூறு வழக்கு போட போகிறோம். இந்த பிரச்சினையை முதன் முதலாக கிளப்பிய டாக்டர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு போட இருக்கிறோம். அப்போது அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலம் யார்-யார் பெயரில் இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வரும். அவர்கள் ஆதாரம் கொடுத்தால் எந்த நேரத்திலும் வரத்தயராக இருக்கிறோம் என்று ஆணையரிடம் சொல்லிவிட்டு வந்தோம். எப்போதும் வரத் தயார் எந்த இடத்திற்கும் வரத்தயார். சென்னை அல்ல டெல்லிக்கு கூப்பிட்டாலும் வரத்தயார் எனக் கூறிவிட்டு வந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


“தி.மு.க.வின் சவாலை ஏற்கிறேன்”
டாக்டர் ராமதாஸ் பதில்

தி.மு.க.வின் அவதூறு வழக்கு குறித்து டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத தி.மு.க. அச்சிக்கலை எழுப்பிய என் மீது 1,000 ஏக்கர் குறித்து புகார் தெரிவிக்க போவதாக கூறி உள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1,000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதனை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story