மெழுகுவர்த்தியால், ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் தீ விபத்து: படுக்கை அறையில் தூங்கியவர்களுக்கு மூச்சுத்திணறல்


மெழுகுவர்த்தியால், ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் தீ விபத்து: படுக்கை அறையில் தூங்கியவர்களுக்கு மூச்சுத்திணறல்
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஏற்றிய மெழுவர்த்தியால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் படுக்கை அறையில் தூங்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

பெரம்பூர்,

சென்னை எம்.கே.பி. நகர் நெசவாளர் காலனி 15-வது கிழக்கு குறுக்கு சாலையில் வசித்து வருபவர் அருள்ராஜ் (வயது 35). ஐ.டி. நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதனால் அருள்ராஜ் வீட்டின் படுக்கை அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருந்தனர். நள்ளிரவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருள்ராஜ் தூங்கிவிட்டார். தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்த மெழுகுவர்த்தி கரைந்து, அருகில் கிடந்த துணியில் தீப்பிடித்து அறை முழுவதும் தீ பரவியது.

அந்த அறையில் இருந்த பீரோ, பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட பொருட்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அறை முழுவதும் புகை மூட்டமாக மாறியது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த அருள்ராஜ், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திடுக்கிட்டு எழுந்து பார்த்த அவர்கள், அறையில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள், வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் தீக்காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அறையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் அந்த அறையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story