தமிழக அரசு அறிவித்துள்ள: ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கலாம் - மாநில தேர்தல் ஆணையர் பேட்டி


தமிழக அரசு அறிவித்துள்ள: ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கலாம் - மாநில தேர்தல் ஆணையர் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2019 11:45 PM GMT (Updated: 7 Dec 2019 11:03 PM GMT)

தேர்தல் நடைமுறை அமலில் இருந்தாலும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழக அரசு பொங்கல் பரிசை (ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு) அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதை வழங்க சிக்கல் ஏதேனும் உள்ளதா?

பதில்: ஏற்கனவே நடைமுறை யில் இருப்பது தொடரலாம்.

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளபடி 4 மாதத்துக்குள் எஞ்சிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அதனுடன் சேர்த்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் சேர்த்து ஒரே கட்டமாக நடத்தப்படுமா?

பதில்:- ஊரக உள்ளாட்சி தேர்தல் வேறு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேறு. சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி எஞ்சியுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- நிர்வாக பணி காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த நிர்வாக பணி காரணங்கள் என்ன என்று கூறு முடியுமா?

பதில்:- இப்போதும் கூறுகிறேன் நிர்வாக பணிகள்தான் காரணம். விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- சற்று முன் தி.மு.க.வில் இருந்து ஏதாவது புகார் அளிக்கப்பட்டதா?

பதில்:- ஆம் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து தனியாக பார்க்கப்படும்.

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உங்களுக்கு பின்னடைவாக பார்க்கிறீர்களா?

பதில்:- தேர்தல் ஆணையத்திற்கு பின்னடைவு, முன்னடைவு என்று எதுவும் இல்லை. நாங்கள் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் நடத்த சில ஆணைகளை பிறப்பித்து உள்ளது. அதை பின்பற்றி தேர்தல் நடக்கும்.

கேள்வி:- அரசின் எண்ணத்தைத் தான் தேர்தல் தேதி அறிவிப்புகளில் நீங்கள் வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

பதில்: தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

கேள்வி:- ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை தனித்தனியே நடத்துவதால் தற்போது நடைபெறும் தேர்தலின் வெற்றி வருகிற தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்ற கருத்து நிலவுகிறதே?

பதில்:- கருத்துகள் பல இருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கேள்வி: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- பறக்கும் படை போன்ற அமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி கூறினார்.

Next Story