“தமிழினத்துக்காக தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்” அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


“தமிழினத்துக்காக தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்” அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 5:30 AM IST (Updated: 12 Jan 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழினத்துக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது என்று அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

போர்ட்பிளேர், 

அந்தமானில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1,191 கடல் மைல் தொலைவு கடந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உறவால், உணர்வால், ரத்தத்தால், ஒரு தாய் மக்கள் என்ற அந்த உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தமானில் கருணாநிதி சிலை திறக்கப்படுவது, கருணாநிதிக்கு கிடைத்திருக்கும் பெருமை அல்ல; அந்தமானுக்கே கிடைத்திருக்கும் பெருமையாகத்தான் நீங்கள் கருதவேண்டும்.

உங்கள் பையனை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள், வாரிசை உருவாக்கிவிட்டீர்கள் என்று விமர்சனம் வந்தது. அதற்கு கருணாநிதி, ‘நான் அவனை அழைத்து வரவில்லை. எமர்ஜென்சி கொடுமையால் அவன் இழுத்துவரப்பட்டு இருக்கிறான்’ என்று பதில் சொன்னார்.

1953-ல்தான் கல்லக்குடிப் போராட்டம். நான் பிறந்த குழந்தை. என்னுடைய தாயார் தயாளு அம்மாள் என்னை கைக்குழந்தையாக தூக்கிக்கொண்டு திருச்சியில் இருக்கும் சிறைக்கு வந்தார். நான் பிறந்தவுடன் வீட்டிலிருந்து வெளியில் போய்ப் பார்த்த முதல் இடமே சிறைதான். அதன் பிறகுதான் எமர்ஜென்சியைப் பார்த்தேன்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்காக, தமிழ் இனத்திற்காக மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் குரல் எழுப்பிப் போராடுகிற சூழ்நிலையைத் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மாநிலக் கட்சி எனக் குறுக்கிவிட முடியாது.

இந்தியாவில் இன்றைக்கு மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. கிளர்ந்து எழுந்து இருக்கிறது. உதாரணத்திற்கு மற்ற மாநிலங்களில் இன்றைக்கு ஏதேனும் பிரச்சினைகள், மறியல், பேரணி, கூட்டம் என்று சொன்னால் நம்மைத்தான் முதலில் அழைக்கிறார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள், எந்த மாநிலத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சரவை பதவி ஏற்கிறது என்றால், அந்த விழாவிற்கு தவறாமல் என்னை அழைக்கிறார்கள். அந்த விழாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. தி.மு.க.விற்கு கிடைத்த பெருமை. தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பெருமை. ஏன் தமிழர்களுக்கே கிடைத்திருக்கும் பெருமை.

பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், இலங்கை வாழ் தமிழ் மக்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். பல பிரச்சினைகளை சொன்னார்கள். லாரன்ஸ் என்னை வந்து சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார். முழுமையாக படித்துப் பார்த்தேன். அதில், 1970-1976 ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து வந்திருக்கும் 78 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படவேண்டும் என்று உறுதி வழங்கப்பட்டதன்படி, இன்னும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி இருந்தனர். இதுவரையில் தொடர்ந்து அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.

அவர்களுக்கு நான் ஒரு உறுதியினை வழங்குகிறேன்; இப்பொழுது நாடாளுமன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு 40 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நாங்கள் அதற்காக குரல் கொடுப்போம். தொடர்ந்து போராடுவோம். மக்களவையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் இணைந்து எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதை இடைவிடாமல் தொடர்ந்து செய்வோம்.

உள்ளாட்சித் தேர்தலில் இன்றைக்கு பெரும்பான்மையான இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் உங்களுக்கும் விரைவில் வரப்போகிறது. எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படி ஒருங்கிணைந்து, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, நம் தோழர்களுக்குள் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தமானில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உங்களுடைய பணி இருந்ததோ, அதேபோல் இந்த தேர்தலிலும் இருந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயம் அந்த ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

தமிழர்களுக்காக, தமிழினத்துக்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது. ஆகவே இங்கு நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, வெற்றி விழா நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நானே தேடி வருவேன் அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 


Next Story