சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எஸ்.ஐ.வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் கடந்த 8 ஆம் தேதி களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான வில்சன் (வயது 57) பணியில் இருந்தார்.
இரவு 9.30 மணி அளவில் திடீரென்று சோதனைச்சாவடிக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதோடு, கத்தியாலும் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"எனது கணவர் குடும்பத்தைவிட காவல்துறையை அதிகம் நேசித்தவர்" என்று உயிரிழந்த வில்சனின் மனைவி கூறியிருப்பது மனவேதனை தருகிறது.
— M.K.Stalin (@mkstalin) January 11, 2020
குற்றவாளிகள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! pic.twitter.com/1iVjaK74PM
Related Tags :
Next Story