தமிழகத்தில் ‘அரசு ஆன்லைன் சேவை’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தமிழகத்தில் ‘அரசு ஆன்லைன் சேவை’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-04T00:38:59+05:30)

தமிழகத்தில் ‘அரசு ஆன்லைன் சேவை’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

சென்னை, 

தமிழகத்தில் சினிமா டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்தர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், நில நிர்வாகம் இணை ஆணையர் ஆர்.பூவராகவன், மாநில மின்னணு ஆளுமை உறுப்பினர் எம்.சிவகுமார் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் டி.என்.டி.ராஜா, உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், வி.டிஎல்.சுப்பு, ஐ டிரீம்ஸ் மூர்த்தி, சீனு ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த செப்டம்பர் மாதம் இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவை அந்தக் கூட்டத்தில் அரசு அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திலும் அதுபற்றி ஆலோசித்தோம். இது முடிவை எட்டும் நிலைக்கு வந்துவிட்டது. எந்த வகையில் மக்களுக்கு குறைந்த செலவில் இந்த சேவையை அளிக்க முடியும் என்பதை விவாதித்துள்ளோம்.

திரையரங்கு உரிமையாளர்கள் பேசும்போது, ‘புக் மை ஷோ’ என்பது போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம் என்று கூறினார்கள். ஒப்பந்தம் செய்திருப்பவர்கள் அந்த ஒப்பந்தத்தில் நீடிக்கலாம். ஒப்பந்தம் இல்லாதவர்கள், அரசு ஆன்லைன் டிக்கெட் சேவைக்கு வரலாம். இது கட்டாயம் இல்லை.

மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் டிக்கெட் சேவை வழக்குவதுதான் இதன் நோக்கம். இந்த ஆன்லைன் முறையில், ஒரு சினிமா படத்தின் தன்மையும் வெளிப்பட்டுவிடும். தமிழகத்தில் 977 திரையரங்குகள் இயங்குகின்றன.

மாநிலம் முழுவதும் அந்தப் படம் எவ்வளவு வசூலைப்பெற்றுள்ளது? போன்றவற்றை சினிமா சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ளலாம். அடுத்த கூட்டத்தில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தும் கூட்டமாக அமையும்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் மக்களுக்கு பயனளிக்கும் கட்டணத்தை அரசு நிர்ணயித்தால் அதற்குத்தான் அவர்கள் வருவார்கள். ஆனால் இதில் மட்டும்தான் மக்கள் வரவேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. இதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

மொத்தத்தில், ஒரு சர்வர் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு எத்தனை டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது? எந்தெந்த காட்சிகளில் எத்தனைபேர் படம் பார்த்திருக்கின்றனர்? எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது? என்பதை அறிய முடியும். இது திரைப்பட துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கே தங்கள் படம் செய்த வசூல் பற்றி தெரியாத நிலை உள்ளது. இனி அப்படி இருக்காது. அரசின் ஆன்லைன் டிக்கெட் வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும்.

பண்டிகை காலங்களில் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்காக சிறப்பு கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்கும் என்றும் கூறியிருக்கிறோம். இதனால் அதிக பணம் செலவழிக்காமல் மக்கள் படம் பார்க்கலாம். அதில் அரசுக்கும் வருமானம் வரும்.

இது, பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரெயில்களை அரசு விடுவது போன்றதுதான். இந்த நடவடிக்கையால் சினிமா தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும்.

தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி என்னிடம் யாரிடம் இருந்தும் புகார் வரவில்லை. இதற்காக சினிமா தயாரிப்பாளர் கவுன்சில் என்று ஒன்று உள்ளது. அங்கு தனி அதிகாரி உள்ளார். அங்கே சென்று தீர்வு காண அரசு உதவும்.

அரசு ஆன்லைன் டிக்கெட் நடைமுறைக்கு வரும் நேரத்தில் வாகன நிறுத்த கட்டணம் போன்றவற்றையும் சீர்படுத்தலாம். தியேட்டர் பராமரிப்பு 8 சதவீதமாக கட்டணத்தையும் குறைத்திருக்கிறோம். மேலும் அதை குறைக்கக் கோரியுள்ளனர். ஆன்லைன் டிக்கெட் நடைமுறைக்கு வரும்போது அவர்களின் கோரிக்கைகளையும் சேர்த்து பரிசீலிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story