பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 1 மணி நேரம் வேலைநிறுத்தம்


பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 1 மணி நேரம் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 3 Feb 2020 10:30 PM GMT (Updated: 3 Feb 2020 9:18 PM GMT)

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில் 1 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, 

மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் செந்தில்குமார், எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரெகு, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், எல்.ஐ.சி. ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் சுவாமி நாதன் சிறப்புரையாற்றினார். அப்போது சுவாமிநாதன் பேசியதாவது:-

1956-ம் ஆண்டு ரூ.5 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டு மட்டும் பங்கு ஆதாயமாக 2 ஆயிரத்து 611 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளோம். 28 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளோம்.

கடந்த 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு எல்.ஐ.சி.யின் பங்காக ஆண்டுக்கு சராசரி 2 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். தற்போது 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான எல்.ஐ.சி.யின் சராசரி ஆண்டு பங்களிப்பானது 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

100 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ள பிரதமர் மோடி அந்த நாடுகளில் ஏதாவது ஒரு நிறுவனத்தை எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒப்பாக கூற முடியுமா? நாட்டின் குக்கிராமங்கள் முதல் பயங்கரவாதம் நிறைந்த பதற்றமான பகுதிகளில் கூட எல்.ஐ.சி. நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது.

எல்.ஐ.சி.யின் உரிமம் பட்டுவாடா 98.4 சதவீதமாக உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் 23 தனியார் நிறுவனங்கள் இருந்தபோதும் 72 சதவீத சந்தை பங்களிப்பு எல்.ஐ.சி. நிறுவனத்திடம் உள்ளது.

எந்த ஒரு தரவையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் தெரிவித்து உள்ளனர். எல்.ஐ.சி.யை எப்படி பாதுகாப்பது? என்றும், அதன் வணிகத்தை எப்படி பாதுகாப்பது? எனவும் இங்கு கூடி இருக்கும் அமைப்பினருக்கு (ஊழியர் சங்கங்கள்) தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ரமேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதல் கட்டமாக நாளை (இன்று) நாடு முழுவதும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். மத்திய அரசு தனது முடிவை கைவிடும் வரை தொடர் போராட்டங்கள், பிரசாரங்களை நடத்துவோம். 11 லட்சம் முகவர்கள், 40 கோடி காப்பீட்டுத்தாரர்களிடம் எடுத்து கூறி மக்கள் கருத்தை உருவாக்கி அரசின் முடிவை மாற்ற வைப்போம்’ என்றார்.

Next Story