குரூப் -4 தேர்வு முறைகேடு: தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர் சரண் அடைந்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு தரவரிசை பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தேர்வெழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இது தொடர்பாக தேர்வாணையம் நடத்திய விசாரணையில், இரு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.
இந்த முறைகேட்டின் முக்கிய நபராக கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சிபிசிஐடி தனிப்படை சென்றது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த காவலா் சித்தாண்டியை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
இடைத்தரகர் ஜெயக்குமாரை பல நாட்களாக சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில், திடீர் திருப்பமாக இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
Related Tags :
Next Story