மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம்: விஜய் ரசிகர்களும் குவிந்ததால் பரபரப்பு - பாதுகாப்பு படையினர் தடியடி


மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம்: விஜய் ரசிகர்களும் குவிந்ததால் பரபரப்பு - பாதுகாப்பு படையினர்  தடியடி
x
தினத்தந்தி 7 Feb 2020 1:51 PM GMT (Updated: 2020-02-07T19:21:58+05:30)

மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலி சுரங்கம் முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜய்யை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி  நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என  பாஜகவை சேர்ந்த சரவண சுந்தரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்எல்சி  நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது 'மிகவும் பாதுகாப்பு பகுதி என்று கடும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதியான சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடத்த என்எல்சி  நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்றும், விஜய்யின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது போல், தங்களுக்கும் குடும்பத்துடன் உள்ளே சென்று வீடியோ, படங்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜகவினர் போராட்டம் நடத்துவதை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும்  என்எல்சி  2 வது சுரங்கம் உள்ள பகுதியில் விஜய்க்கும், படக்குழுவிற்கும் ஆதரவாக குவிந்தனர்.  பாஜக போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான விஜய் ரசிகர்களும் திரண்டதால்  அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.  பாதுகாப்பு கருதி ரசிகர்களை கலைக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலி சுரங்கம் முன்பு தடியடி நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினரும் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story