குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2020 9:00 PM GMT (Updated: 7 Feb 2020 7:15 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக சென்னை மண்ணடியில் உள்ள மாஸ்கான் சாவடியில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மபூஸ்கான் கார்டன் பகுதி முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைப்பாளர் கே.டி.அப்பாஸ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயல் தலைவர் எம்.நாகூர் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘‘திரும்பப் பெறு! திரும்பப் பெறு! கருப்பு சட்டங்களை திரும்பப் பெறு!’’ என்று கோ‌‌ஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் வாயில் கருப்புத்துணி கட்டி இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.சி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷாவும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக கூறுகின்றனர். ஆனால், இந்த போராட்டங்களை மக்கள் தாமாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.

போராட்டங்களின் இறுதியாக ஒத்துழையாமை மற்றும் சட்டமறுப்பு நடவடிக்கைகளை கையில் எடுப்போம். இறுதியில் ஜனநாயகம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story