திருச்செந்தூர், பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர், பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-09T01:38:11+05:30)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

பெரும்பாலான பக்தர்கள் ஒரு அடி நீளம் முதல் 15 அடி நீளம் வரையிலான அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, சர்ப்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்தும், வேல் ஏந்தியும், பாத யாத்திரையாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

நேர்த்திக்கடன்

அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், முருகப்பெருமானின் உருவப்படத்துடன் கூடிய சப்பரத்தை தூக்கி வந்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளித்ததால், திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

பழனி முருகன் கோவில்

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தைப்பூசத் திருநாளையொட்டி அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பிறகு மதியம் 12 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார்.

மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனையும், தேங்காய் உடைத்தலும் நடைபெற்றது. தொடர்ந்து வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந்தேதி இரவு 11 மணிக்கு மேல் கொடி இறங்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

உவரி சுயம்புலிங்க சுவாமி

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாளான நேற்று அதிகாலை தேரோட்டம் நடந்தது. இதில் இன்பதுரை எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேர் நிலைக்கு வந்ததும் கடலில் தீர்த்தவாரியும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், நடந்தது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.

Next Story