பா.ம.க.வின் பொது நிழல் பட்ஜெட் வெளியீடு அ.தி.மு.க. கூட்டணியில் தொடருவோம் - டாக்டர் ராமதாஸ் பேட்டி


பா.ம.க.வின் பொது நிழல் பட்ஜெட் வெளியீடு அ.தி.மு.க. கூட்டணியில் தொடருவோம் - டாக்டர் ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2020 9:15 PM GMT (Updated: 2020-02-13T02:26:47+05:30)

சென்னையில் பா.ம.க.வின் பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ், வரும் காலங்களிலும் அ.தி.மு.க. கூட்டணியில் தொடருவோம் என்று கூறினார்.

சென்னை, 

தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக தனது பரிந்துரைகள், யோசனைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் பா.ம.க. தரப்பில் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் பா.ம.க. தரப்பில் விவசாய நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 18-வது பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார். அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விவசாயத்துக்கு பாதுகாப்பு அளித்தல், உலகத்தர உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தல், மகளிர் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சியை அதிகரித்தல் உள்ளிட்ட 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து பொது நிழல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

72 பக்கங்கள் அடங்கிய பொது நிழல் பட்ஜெட்டில் 120 தலைப்புகளில் 434 யோசனைகள் பா.ம.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழகத்தில் ஐ.ஐ.டி.க்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 5 இடங்களில் ஏற்படுத்தப்படும்.

* 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* தஞ்சை, நெல்லை, தர்மபுரி, வேலூர் ஆகிய நகரங்களில் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.

* படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

* 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

* தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும்.

* 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். இதன் பிறகு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 60 மாவட்டங்கள் இருக்கும். நாகை, தஞ்சை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்கள் நடப்பாண்டு பிரிக்கப்பட்டு 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

* ஒருதலை காதல் என்ற பெயரில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தடுக்க தனி காவல் பிரிவு ஏற்படுத்தப்படும்.

* சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ரெயில் பாதை அமைப்பது உறுதி செய்யப்படும்.

* கீழடியில் அமைக்க உத்தேசித்திருந்த அருங்காட்சியகம் திட்டமிட்டிருப்பதை விட பெரிதாக கட்டப்படும்.

* 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகள் மூலம் பழகுனர் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

* மகளிர் தினமான மார்ச் 8-ந்தேதி முழுமையான மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்கண்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

பா.ம.க.வின் பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் கூறும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் அரசுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்பதற்காக, நிழல் பட்ஜெட் வெளியிட்டு வருகிறோம்.

அறிவு பஞ்சம் இருப்பதன் காரணமாக பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து தி.மு.க. வாங்கியிருக்கிறது.

தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணியிலேயே இருப்போம். வரும் காலங்களிலும் அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடரும். ரஜினிகாந்த் கட்சி பற்றிய பேச்சுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story