மருமகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை ஐ.பி.எஸ். அதிகாரியின் தந்தை பதிலடி புகார் - “வரதட்சணை கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை”


மருமகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை ஐ.பி.எஸ். அதிகாரியின் தந்தை பதிலடி புகார் - “வரதட்சணை கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை”
x
தினத்தந்தி 12 Feb 2020 9:30 PM GMT (Updated: 12 Feb 2020 9:20 PM GMT)

தனது மகன் மீது மருமகள் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், வரதட்சணை கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை என்றும் ஐ.பி.எஸ். அதிகாரியின் தந்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, 

திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஆனந்த். இவர் கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளார். இவருக்கும், சென்னையை சேர்ந்த அருணா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து அருணா தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், “தனது கணவர் ஆனந்த் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக தன்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும்” குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டபோதும், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நியாயம் கேட்டு மெரினா காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகவும் அருணா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆனந்தின் தந்தை ராஜகுரு தனது மருமகள் அருணாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன். எனது மருமகள் அருணா கொடுத்த புகாரில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமர்பித்துள்ளோம். விசாரணையில் எனது மருமகள் பற்றி பல உண்மைகள் வெளிவந்துள்ளது. கோர்ட்டு விசாரணையிலும் பல உண்மைகள் வெளிவரும்.

திருமணத்துக்கு முன்பு நாங்கள் வரதட்சணை கேட்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. அருணாவுக்கு போடுவதற்காக செய்து வைத்திருந்த நகைகளை வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்துவிட்டனர் என்றும், அதை மீட்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அருணாவின் பெற்றோர் எனது மகனிடம் பரிந்துரை கடிதம் கேட்டனர்.

நாங்கள் நகையே வேண்டாம் என்று கூறிவிட்டோம். வரதட்சணையாக ரொக்கப்பணம் தருவதாக கூறினார்கள். அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டோம். அதற்கான ஆடியோ ஆதாரத்தை தேனாம்பேட்டை போலீசில் சமர்ப்பித்துள்ளோம்.

அருணாவின் மனப்போக்கு சரியில்லாத காரணத்தினால்தான் அவரோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு போட்டுள்ளோம். எனது மகன் 2-வது திருமணம் செய்ய முயற்சித்ததாக அருணா சொல்லியிருப்பது தவறானது.

கோர்ட்டில் வழக்கு விசாரணை இருப்பதால் நான் சில விவரங்களை வெளியில் சொல்ல முடியாது. அருணா கூறிய குற்றச்சாட்டுக்களை நாங்கள் சட்டப்படி சந்திப்போம். ஊடகங்களில் தவறான தகவல்களை தெரிவித்த அருணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story