பிகில் பட தயாரிப்பாளர் மகள் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்; ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார்


பிகில் பட தயாரிப்பாளர் மகள் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்; ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார்
x
தினத்தந்தி 13 Feb 2020 12:00 AM GMT (Updated: 12 Feb 2020 11:42 PM GMT)

பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.

சென்னை, 

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பிகில் படத்துக்கு அவர் பைனான்ஸ் செய்திருப்பது தெரியவந்தது.

அதன்படி பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி எஸ்.அகோரம் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையை தொடர்ந்து அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூர் பண்ணை வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் விஜய், கல்பாத்தி எஸ்.அகோரம், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி நடிகர் விஜய் சார்பிலும், அன்புசெழியன் சார்பிலும் ஆடிட்டர்கள் நேற்று முன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்தநிலையில் கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா வருமானவரி அலுவலகத்தில் நேற்று ஆஜராகி ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார். அதேபோல் அன்புசெழியனின் ஆடிட்டர்களும் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்து சென்றனர்.

இதுகுறித்து வருமானவரி அதிகாரிகள் கூறியதாவது:-

பைனான்சியர் அன்புசெழியன், கல்பாத்தி எஸ்.அகோரம், நடிகர் விஜய் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்காமல், தங்கள் சார்பில் ஆடிட்டர் மற்றும் வக்கீல்களை ஆஜராகி விளக்கம் அளிக்க அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் முறையாக பதில் அளித்துவிட்டால், நடிகர் விஜய், அன்புசெழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் வரவேண்டியது இருக்காது. தேவைப்பட்டால் 3 பேரையும் அழைப்போம். இது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தாது.

சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆடிட்டர் மற்றும் வக்கீல்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது. இவர்கள் சில தகவல்களை தெரிவித்து சென்றுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள வருமானவரி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

வருமானவரி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் நடிகர் விஜய், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் அன்புசெழியன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் உயர் அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக கூறுகிறார்கள். இதன்மூலம் வருமானவரி துறை வட்டாரங்களில் முரண்பாடான தகவல் பரவியுள்ளது.

Next Story