மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மாற்று இடங்களில் திறக்க நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் தீவிரம்


மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மாற்று இடங்களில் திறக்க நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் தீவிரம்
x
தினத்தந்தி 13 Feb 2020 9:30 PM GMT (Updated: 2020-02-14T02:37:11+05:30)

மூடப்பட்ட 400 மதுக் கடைகளை மாற்று இடங் களில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை, 

மதுபான மொத்த விற்பனை தனியார் வசம் இருந்த நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி அரசு(டாஸ்மாக் நிர்வாகம்) ஏற்று நடத்தியது. அப்போது 6 ஆயிரத்து 700 கடைகள் தமிழகத்தில் இருந்தது.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மதுவிலக்கு கொள்கையை அறிவித்த போது 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் அதனை பார்த்து மதுக்குடிக்க சென்றுவிடுகிறார்கள் என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது என்றும் கோர்ட்டில் வழக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து கோர்ட்டு நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 300 மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், தற்காலிகமாக மூடப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து சற்று தொலைவில் மாற்று இடத்தில் திறந்து கொள்ள அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது 2,900 கடைகள் திறக்கப்பட்டு, தமிழகத்தில் 5 ஆயிரத்து 300 மதுக்கடைகள் இருக்கின்றன.

மீதமுள்ள 400 கடைகளை திறப்பதற்கான பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் செய்து வருகிறது. அதற்கான மாற்று இடங்களை தேர்வு செய்து விரைவில் அமைப்பதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டு நிலவரப்படி, ஆண்டுக்கு ரூ.31 ஆயிரத்து 157 கோடி வருவாய் (ஆயத்தீர்வை ரூ.6 ஆயிரத்து 863 கோடியும், விற்பனை வரி ரூ.24 ஆயிரத்து 294 கோடியும் சேர்த்து) டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருகிறது. இது 2020-21-ம் ஆண்டில் ரூ.34 ஆயிரம் கோடி வருவாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story