இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jun 2025 7:26 PM IST
மத்திய கிழக்கில் பதற்றம்.. ராணுவத்தை வேறு இடத்திற்கு மாற்றும் அமெரிக்கா
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாகி வருவதால் அமெரிக்க அரசு, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தனது போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ குழுக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 13 Jun 2025 3:51 PM IST
தொழில்நுட்ப கோளாறு - திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
பதான்கோட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாலட் கிராமத்தில் உள்ள திறந்தவெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் விமானப்படை தளத்திற்கு திரும்பியுள்ளதாகவும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
- 13 Jun 2025 1:47 PM IST
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் ‘ரெட் அலர்ட்’
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று (13-06-2025) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (14-06-2025): கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 13 Jun 2025 1:39 PM IST
மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டாஸ் - அரசின் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி குண்டர் சட்டம் பாயும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இதன்படி உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக விசாரணையின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
- 13 Jun 2025 1:31 PM IST
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு விட்டதாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை என்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க கூறி, மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- 13 Jun 2025 1:27 PM IST
"என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்.." - ராமதாஸ்
தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-
2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்
இவ்வாறு அவர் கூறினார்.
- 13 Jun 2025 1:25 PM IST
"என்னை சுற்றிலும் சடலங்கள்.. " - விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன..?
விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி கூறுகையில், “என் கண் முன்னே நடந்தது. நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. உதாரணமாக, நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன். நான் என் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன். விமானத்தில் என்னைச் சுற்றிலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடல்கள் சிதறிக் கிடந்தன” என்று அவர் கூறினார்.
- 13 Jun 2025 1:21 PM IST
டாஸ்மாக் விவகாரம் - அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இதனை எதிர்த்து, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை? விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
- 13 Jun 2025 1:16 PM IST
மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முடிவு: மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆயத்தம்
நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
- 13 Jun 2025 12:13 PM IST
இஸ்ரேல் தாக்குதல்...ஈரான் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் பலி
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.