2020-2021 தமிழக பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


2020-2021 தமிழக பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 14 Feb 2020 10:54 AM GMT (Updated: 2020-02-14T16:24:51+05:30)

2020-2021 தமிழக பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழக அரசின்  2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்  இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், காலை 10:00 மணிக்கு  பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ கூறியதாவது:-

தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது தான் அதிமுக அரசின் சாதனை. சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு வெறும் கானல் நீர் என்பது பட்ஜெட்டில் வெளிப்பட்டிருக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை.ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை எனும் பாஜகவின் திட்டத்தை அறிவித்தது ரேஷன் முறையை சீர்குலைத்து விடும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், 

2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்றைக்கு பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

2020-2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட் தான், இந்த அரசின் இறுதி பட்ஜெட்டாகும். எனவே இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு இத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடைய வேண்டும்  என அதில் கூறியுள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.,கூறியதாவது:-

பெரம்பலூரில் வெங்காயம் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். வழக்கமான வரவு-செலவு கணக்குகளின்றி வேறெந்த புதிய திட்டங்களும் தமிழக பட்ஜெட்டில் இல்லை. நீண்டகால திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளோ இல்லாத பட்ஜெட் என்று கூறினார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், 

தமிழகத்தின் நிதிநிலைமை சிக்கலாக இருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளார். காற்றில் வரைந்த ஓவியம் போல செயல் திட்டமில்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட தமிழக பட்ஜெட்.   என அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கிய நிதியை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியதாக வரவேற்கிறேன் என்றார். 

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.  வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு எந்த திட்டங்களும் தமிழக பட்ஜெட்டில் இல்லை என்று அவர் கூறினார்.

Next Story