சிஏஏவுக்கு எதிராக சென்னையில் விடிய விடிய போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆனால் அதன்பிறகும் அங்கு முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். போராட்டம் வலுத்ததால் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. சம்பவ இடத்துக்கு வடக்கு மண்டல இணை கமிஷனர் கபில்சிபில்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பதிலுக்கு போலீசார் மீது கல்வீசி தாக்கினர். மேலும் பிளேடாலும் அறுத்தனர். இதில் இணை கமிஷனர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போராட்டக்காரர்களுடன் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அங்கு போராட்டம் தொடர்ந்தது.
அதேபோல் மாதவரம், அமைந்தகரை, மண்ணடி, புதுப்பேட்டை, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருச்சி, கோவை, செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விடிய விடிய நீடிக்கும் போராட்டம்
போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் சிஏஏவுக்கு எதிராகவும் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரை, கரூர், நாகை, விழுப்புரம், ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் இரவிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து விளக்கம் அளித்து டுவிட் செய்துள்ள சென்னை போலீசார், “ 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய்த் தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பொய்யான செய்தி:
— Chennai City Police (@chennaipolice_) February 14, 2020
இந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. pic.twitter.com/DklNuRnGZH
Related Tags :
Next Story