பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு சட்டையில் ஒட்டி இருந்த கேக்கை கழுவ சென்றபோது பரிதாபம்


பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு சட்டையில் ஒட்டி இருந்த கேக்கை கழுவ சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Feb 2020 9:51 PM GMT (Updated: 2020-02-16T03:21:37+05:30)

பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சட்டையில் ஒட்டி இருந்த கேக்கை கழுவ சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சாவடிப்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி அழகரசி. இவர்களுடைய மகன் அலெக்சாண்டர் (வயது 14). இவர் அவல்பூந்துறை அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அலெக்சாண்டரின் பிறந்தநாள். இதனால் அவர் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள தோட்டத்துக்கு தனது நண்பர்கள் 15 பேருடன் சென்று பிறந்நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அலெக்சாண்டரின் சட்டையில் கேக் ஒட்டிக்கொண்டிருந்தது.

சாவு

சட்டையில் ஒட்டிக்கொண்டிருந்த கேக்கை தண்ணீரில் கழவ விரும்பினார். இதைத்தொடர்ந்து தோட்டத்தில் இருந்த 40 அடி ஆழ கிணற்றில் இறங்கினார். அந்த கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இறங்கியபோது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

உடனே அங்கிருந்த அவருடைய நண்பர்கள் சத்தம் போட்டு கத்தினர். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்கு ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் அலெக்சாண்டரை காப்பாற்ற முடியவில்லை. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

மீட்பு

இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அலெக்சாண்டரின் உடலை மீட்டனர். அறச்சலூர் போலீசார் அலெக்சாண்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவரின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story