தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா நிறைவேற்றம்


தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா நிறைவேற்றம்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:12 AM GMT (Updated: 2020-02-20T15:58:05+05:30)

தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா இன்று நிறைவேறியது.

சென்னை,

தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா இன்று தாக்கலானது.  தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இந்த மசோதாவை தாக்கல் செய்வது பெருமையாக உள்ளது என கூறினார்.

காவிரி டெல்டாவை பாதுகாப்பதற்கான இந்த சட்டத்தினை தி.மு.க. வரவேற்கிறது என கூறிய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகியவையே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும்.  ஆனால் இந்த சட்டம் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சட்டசபையில் இதற்கு பதிலளித்த தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரவில்லை.  ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் உருவாகும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.  இந்த சட்டத்தின்படி, புதிய திட்டங்களை தடுப்பதே நோக்கம் என கூறினார்.

இதனை அடுத்து தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா இன்று நிறைவேறியது.  இதன்பின்னர், சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Next Story