மக்கள் விரும்பும் அரசு விரைவில் அமைவது உறுதி உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மக்கள் விரும்பும் அரசு விரைவில் அமைவது உறுதி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 2 March 2020 1:45 AM IST (Updated: 1 March 2020 10:39 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் விரும்பும் அரசு விரைவில் அமைவது உறுதி என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த முகாமில் 98 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்-இளம்பெண்கள் கலந்துகொண்டு நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர். தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் தயாரிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமே‌‌ஷ் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.தனசேகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம். என்னை பொறுத்தவரை அவரது பிறந்தநாளை முன்பு போலவே இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவதே சரி என்பேன். கட்சிக்காகவும், மக்களுக்காகவும் என்றென்றும் உழைக்கக்கூடிய இளைஞர் அவர். அப்படித்தான் அனைவருமே அவரை பார்க்கிறோம்.

சமீபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலம் தேறி மீண்டும் நம்மை வழிநடத்த வருவார் என்றும் நம்புகிறேன்.

நலத்திட்ட உதவிகள் மூலம் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய முகாம் மூலம் ஏராளமான இளைஞர்-இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆளும்கட்சி செய்யவேண்டிய வேலையை தி.மு.க. செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கான அரசு என்றுமே தி.மு.க. தான். மக்கள் விரும்பும் அந்த அரசு விரைவில் அமைவது உறுதி. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் நமக்கு கிடைத்த வெற்றி வெறும் ‘இண்டர்வெல்’ (இடைவெளி) தான். அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தான் ‘கிளைமேக்ஸ்’ காத்திருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி சட்டசபை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தமிழகத்தில் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. முதல்-அமைச்சர் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் அமர போவதும் உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story