சென்னை வண்ணாரப்பேட்டையில் 17-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்; தலைவர்கள் போல சிறுவர்-சிறுமிகள் வேடமிட்டு நாடகம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் 17-வது நாளாக முஸ்லிம்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது தலைவர்கள் போல சிறுவர்-சிறுமிகள் வேடமிட்டு வந்தனர்.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ‘சென்னை ஷாகீன்பாக்’ எனும் பெயரில் கடந்த 14-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தை விட்டு நகராமல் அங்கேயே தொழுகை நடத்தியும், உணவருந்தியும் தொடர்ந்து வருகிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். அவ்வப்போது கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
இந்தநிலையில் 17-வது நாளாக நேற்றும் முஸ்லிம்கள் போராட்டம் தொடர்ந்தது. விடுமுறை நாளான நேற்று பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோரும் தங்களது பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த நாடக நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் சிறுவர்-சிறுமிகள் சிலர் மகாத்மா காந்தி, சந்திரசேகர் ஆசாத், ராணி லட்சுமிபாய், பகத்சிங், சுபாஷ்சந்திரபோஷ், ஹஸ்ரத் மோகானி, அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் போல வேடமிட்டும், முகமூடி அணிந்துகொண்டும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தலைவர்கள் கருத்து தெரிவிப்பது போல அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
Related Tags :
Next Story