‘பெண்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும்’ - மகளிர் தின விழாவில் கே.எஸ்.அழகிரி பேச்சு
பெண்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்று மகளிர் தின விழாவில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
சென்னை,
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டி.யசோதா, மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் வக்கீல் சுதா, மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய செயலாளர் சஞ்ஜய் தத் மற்றும் சமூக ஆர்வலர் வக்கீல் சுசீலா ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கே.எஸ்.அழகிரிக்கு மகளிர் காங்கிரஸ் சார்பில் வெள்ளியால் செய்யப்பட்ட காந்தி சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாநில துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.ரஞ்சன் குமார், தகவல் அறியும் உரிமை பிரிவு மாநில துணைத் தலைவர் மயிலை தரணி, மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில், கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
100 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு சமஸ்தானத்துடன் இருந்த போது, பெண்கள் மார்பில் சேலை அணிய முடியாத நிலை இருந்தது. மேலும், பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் முன்பு இருந்தது. இவற்றை எல்லாம் கடந்து தான் பெண்கள் வந்து இருக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக பெண் சக்தியை அடிமட்டத்தில் பலப்படுத்த வேண்டும். பெண்களை அரசியல் ரீதியாக மாற்றிவிட்டால், அவர்களை பணம் கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாத்மா காந்தி சொன்னது போல, பெண்கள் முழு சுதந்திரத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் தினத்தை கொண்டாடி இருக்கிறோம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறி வந்த நிலையில், தற்போது ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நமது மருத்துவத்துறை எப்படியாவது அதை சரிசெய்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரியும், தனியார் ஆஸ்பத்திரியும் இணைந்து தங்களிடம் உள்ள தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா வைரஸ் ஏழை-எளிய மக்களை சென்றடையாமல் பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமையும், பொதுமக்களின் கடமையும் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story