கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சீபுரம் என்ஜினீயர் சென்ற 22 வீடுகளில் மருத்துவ பரிசோதனை; 8 மருத்துவ குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சீபுரம் என்ஜினீயர் சென்ற 22 வீடுகளில் மருத்துவ பரிசோதனை; 8 மருத்துவ குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 8 March 2020 11:00 PM GMT (Updated: 8 March 2020 10:50 PM GMT)

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சீபுரம் என்ஜினீயர் சென்று வந்த 22 வீடுகளுக்கு சுகாதாரத்துறையினர் சென்று அங்குள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

காஞ்சீபுரம், 

ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க என்ஜினீயர் ஒருவர் கடந்த 27-ந்தேதி சொந்த ஊர் வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது ரத்த மாதிரியை கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அவரது ரத்த மாதிரி மீண்டும் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரத்தில் உள்ள என்ஜினீயரின் வீட்டுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினர் சென்றனர். அவரது வீடு, பக்கத்து வீடு மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளித்தனர். ஓமனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த என்ஜினீயர், காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் உள்பட 22 பேரின் வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினர் நேற்று அந்த 22 வீடுகளுக்கும் சென்று, அங்கும் கிருமி நாசினி தெளித்தனர். அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சீபுரத்தில் வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் உள்ளதா? என்பதை கண்காணிக்க 8 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story