கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசு மட்டுமே குறைவு: பெட்ரோல் - ரூ.73.33, டீசல்- ரூ.66.75 என்ற நிலையில் விற்பனை


கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசு மட்டுமே குறைவு: பெட்ரோல் - ரூ.73.33, டீசல்- ரூ.66.75 என்ற நிலையில் விற்பனை
x
தினத்தந்தி 10 March 2020 12:00 AM GMT (Updated: 2020-03-10T05:27:44+05:30)

கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசு மட்டுமே நேற்று குறைந்து இருந்தது.

சென்னை, 

கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய காரணமாக கூறப்படுகிறது. அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு வலியுறுத்தி இருந்தது. ஆனால் இதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்தது.

இதனால் சவுதி அரேபியா அதிரடி முடிவை எடுத்தது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்தது. இப்படியான உரசலாலும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னதான் கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் நேற்று லிட்டருக்கு பெட்ரோல் விலை 25 காசு குறைந்து, 73 ரூபாய் 33 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 26 காசு குறைந்து, 66 ரூபாய் 75 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 20 நாட்களில் மட்டும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 27 டாலர் அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஆனால் அதே நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 10 காசும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 52 காசும்தான் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளியிடம் கேட்டபோது, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக அதன் விலை கணிசமாக குறைந்து வருகிறது. பெருமளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் எண்ணெய் நிறுவனங்கள்தான் விலை குறைப்பது குறித்து முடிவு எடுக்கும்” என்றார்.

Next Story