5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன்? - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பதற்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று பள்ளி கல்வி துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் பொன்முடி:- 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே இந்த ஆண்டு கல்வித் துறைக்கு கூடுதலாக ரூ.5,423 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். 5, 8-ம் வகுப்புகளுக்கு கட்டாய பொதுத் தேர்வு என்று அமைச்சர் அறிவித்தார். பின்னர் அவரே பொதுத் தேர்வு கிடையாது என்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அன்றைய கல்வி முறைக்கும், இன்றைய கல்வி முறைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. மாணவர்கள் யாரையும் பெயிலாக்காமல் தொடர்ந்து தேர்ச்சி பெற வைத்தால் எப்படி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ள முடியும். 5, 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைத்தால், மாணவர்களின் தரம் தெரியும். ஆனால், அனைவரது கோரிக்கையை ஏற்று பொது தேர்வை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. நீங்கள் சொல்லி நாங்கள் ரத்து செய்யவில்லை.
மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தேர்வு குறித்து அவதூறு பரப்பியதால் முடிவை மாற்றிக் கொண்டோம்.
உறுப்பினர் பொன்முடி:- நாம் படிக்கும்போது இ.எஸ்.எஸ்.எல்.சி. இருந்தது. பின்னர், எஸ்.எஸ்.எல்.சி.யாக மாற்றப்பட்டது. தேர்வு வைப்பதால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- விஞ்ஞான உலகத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கு உலகத் தரத்திலான கல்வி கிடைக்க வேண்டும்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்:- நாம் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு தடையாக இல்லை.
உறுப்பினர் பொன்முடி:- நாங்கள் (தி.மு.க.) ‘நீட்’ தேர்வை நுழையவிடவில்லை. நீங்கள் (அ.தி.மு.க.) நுழையவிட்டீர்கள்.
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- 27-12-2010 அன்று காங்கிரஸ் ஆட்சியில் ‘நீட்’ தேர்வுக்கான பாலிசி கொண்டுவரப்பட்டது. எனவே, ‘நீட்’ தேர்வு என்ற வைரசை கொண்டு வந்தது நீங்கள் தான்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரை தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தவரை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டோம் என்பது உண்மை. அந்தந்த மாநிலம் விரும்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சூழ்நிலையில்தான் அது நிறைவேற்றப்பட்டது. இதே அவையில் பல சமயங்களில் எடுத்து சொன்னபோது, எந்த காரணத்தைக் கொண்டும் ‘நீட்’ தேர்வு வராது, அதைத் தடுக்கிற முயற்சியில் தான் ஈடுபடுவோம் என்று நீங்கள் பலமுறை உறுதி மொழி தந்துள்ளர்கள். தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்துள்ளர்கள். உங்களுடைய கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளர்கள். நீதிமன்றம் வரை சென்ற விவகாரம் எல்லாம் தெரியும். அதைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்பட்டு விடும். எனவே, தி.மு.க.வைப் பொறுத்தவரை ‘நீட்’ தேர்வை அன்றைக்கும் எதிர்த்தோம். இன்றைக்கும் எதிர்க்கிறோம். என்றைக்கும் எதிர்ப்போம். எப்போதும் எதிர்ப்போம். உங்கள் நிலை என்ன?.
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு ‘நீட்’ தேர்வை தடுத்தோம். மற்றொரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்திற்கு மட்டுமாவது ‘நீட்’ தேர்வில் இருந்து ஜெயலலிதா விலக்கு கேட்டார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- ஜெயலலிதா எதிர்த்தார். அவருக்கு தைரியம் உண்டு. உங்களிடம் ‘தில்’ இல்லை. விட்டுவிட்டீர்கள்.
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- அப்போது நாங்கள் ‘நீட்’ தேர்வில் இருந்து ஒரு ஆண்டு விலக்கை கேட்டு பெற்றோம்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- ‘நீட்’ தேர்வு உங்கள் (தி.மு.க.) ஆட்சியில் வந்தது. உங்களின் நிலை என்ன?.
உறுப்பினர் பொன்முடி:- அன்று நாங்கள் எதிர்த்ததால் தான் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நுழையவில்லை. தலைவர் கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வியை கொண்டுவந்தார். 2011-2012-ம் ஆண்டில் கல்வியின் தரத்தில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்தது. 2016-2017-ம் ஆண்டில் 8-வது இடத்திற்கு சென்றுவிட்டது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- 12 ஆண்டுகள் சமச்சீர் கல்வி என்று பழைய முறையிலேயே தான் இருந்தது. இப்போது சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்திற்கு இணையாக கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் எந்தத் தேர்வையும் மாணவர்களால் எதிர்கொள்ள முடியும்.
உறுப்பினர் பொன்முடி:- அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு, தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதை காரணமாக கூறலாம். என்றாலும், அரசு பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- மக்களின் உணர்வு ஆங்கில வழி கல்வி என்ற நிலையில் உள்ளது. அதை அரசு உணர்ந்து, எல்.கே.ஜி. ஆங்கில வழி கல்வியை தொடங்கியுள்ளது.
உறுப்பினர் பொன்முடி:- பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அதில், பணிபுரியும் ஊழியர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது.
அமைச்சர் கே.பி.அன்பழகன்:- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரம் பணிக்கு 12,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், அதிகமாக உள்ளவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் பொன்முடி:- ஆசிரியர்கள் அல்லாதவர்கள் மாற்றப்படுகிறார்கள்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்:- அங்கு 127 பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உறுப்பினர் பொன்முடி:- அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அண்ணா பெயரையே மாற்றக்கூடிய நிலை ஏற்படும்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்:- அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்படுகிறது. அண்ணா பெயரை விட்டுக் கொடுக்கும் நிலை அரசுக்கு இல்லை.
உறுப்பினர் பொன்முடி:- சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்:- அவர் ஏற்கனவே ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவில் அவர் இருந்திருக்கிறார். இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story