கொரோனா காலத்தில் மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்கி தள்ளுங்கள்- காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள்தான் தங்களுக்கு முக்கியம் என்றும், கொரோனா காலத்தில் மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர் என்ற தலைப்பில் தனது முகநூல், டுவிட்டர், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் பேசியதாவது:-
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அன்றாடம் மக்களை நேருக்கு நேராகச் சந்தித்தே பழக்கப்பட்டவன் நான் ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாம் எல்லாருமே இப்போது தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை.
அவரவர் வீடுகளில் தனித்து இருந்தால்தான் கொரோனா வைரசைக் கொல்லவும் முடியும்; வெல்லவும் முடியும்! அதனால்தான் வீடியோ மூலமாக உங்களைச் சந்திக்கிறேன்.
கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை ‘அண்ணா அறிவாலயம்’ வளாகத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கத்தை’ அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தோம். சென்னையில் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள தி.மு.க. கட்டிடங்களும் மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம்!
அதுமட்டுமின்றி, ‘மாஸ்க்’ உள்ளிட்ட தற்காப்பு பொருட்களைத் திரட்டி, தேவைப்படுகிற மக்களுக்கு தருகிற மகத்தான வேலையையும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதியினர், தொண்டர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுடன் மக்களாக...
கொரோனா நேரத்திலும் மக்களோடு மக்களாக அவர்களை இருக்க அறிவுறுத்தியிருக்கிறேன்!
தினமும் வீட்டில் இருந்தபடியே இவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிர்வாகியும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னென்ன சேவைகள் செய்தோம் என்று என்னிடம் சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; இந்தியாவுக்கு மட்டுமில்லை; உலகப் பிரச்சினையாக இருக்கிறது. எனக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை மூத்த மருத்துவர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
கட்டணத்தை குறைக்க வேண்டும்
அவர்கள் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிக்கும் ஆய்வின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்! எதனால் அப்படி சொல்கிறார்கள் என்றால், நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே நோய் கிருமியைச் சுமந்து பரப்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்!
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களை மட்டும் பரிசோதனைச் செய்தால் போதாது; வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காப்பதுதான் சரியானது! இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! இந்த பரிசோதனையைச் செய்வதற்கு அதிக கட்டணம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் மாதிரியே, தனியார் மருத்துவமனைகளையும் தயார்படுத்த வேண்டும்.
செயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.
கூடுதல் நிதியை ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்.
நாடு இப்பொழுது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. சிலர் சொல்வது போல இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று; மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது என்பதுதான் உண்மை!
இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முதலில் தமிழக அரசு உணர வேண்டும். ஏதோ சலுகைகள் அறிவித்தோம்; அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துவிடக்கூடாது. ஒவ்வொரு அறிவிப்பும் கடைசி மனிதனையும் போய்ச் சேர்ந்ததா என்பதை சரி பார்க்க வேண்டும்.
கிராமப்புறங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக உயர்ந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனால் மாநிலம் முழுவதும் ஒரே விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
பல்வேறு வகையான கடன்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் உண்டு என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பல வங்கிகள் இம்மாத தவணையை (இ.எம்.ஐ.) வாடிக்கையாளர்களை கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நிறையப் பேர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமிநாசினி, முகக்கவசம், பிளச்சிங் பவுடர் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் ஆட்சி நடத்துகிற முறையா?
துயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டுமா? இந்தநோயின் தீவிரத்தைச் சொல்லி தமிழக அரசுதான் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், நான்தான் முதன்முதலில் தி.மு.க. நிகழ்ச்சிகள் அத்தனையும் மார்ச் 31-ந்தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்படும் என்று மார்ச் 16-ந்தேதியே அறிவித்தேன். இந்த மெத்தனப்போக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரினேன்.
நேரில் பங்கேற்காமல், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டச் சொல்லி அறிவுறுத்தினேன். அதையும் முதல்-அமைச்சர் கேட்கவில்லை.
இந்தத் துறையின் அமைச்சர் கூட வேண்டாம், தானே எல்லாம் என்கிற முனைப்போடு செயல்படுகிற முதல்-அமைச்சர் எதிர்க்கட்சிகளை மட்டும் எப்படி அனுமதிப்பார்?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தி.மு.க., நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி தி.மு.க. அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்வதற்கான அனைத்து தகுதியும் தி.மு.க.வுக்கு இருக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குறைகளை அரசாங்கத்துக்குச் சொல்வதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை தி.மு.க.வுக்கு இருக்கிறது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். மக்களை தவிர வேறெதுவும் எங்களுக்கு முக்கியமில்லை!
அதனால் இந்தத் துயரமான நேரத்தில் மக்களின் உயிரைப் பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்கிறவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதி, மத அடிப்படையில நம்மை பிளவுபடுத்த யாரையுமே அனுமதிக்காதீர்கள்!
கொரோனா நோய்தான் நம்முடைய எதிரியே தவிர; கொரோனா நோயாளி நம்முடைய எதிரி இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒற்றுமையால்தான் எதையும் வெல்ல முடியும். பிரிவினையால் எதையும் வெல்ல முடியாது!
‘வீட்டிலேயே இருக்க முடியவில்லை’, ‘வீட்டிலேயே இருக்க போரடிக்குது’, ‘மனசுக்கு கஷ்டமா இருக்கு’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொல்லி வருகிறார்கள். உண்மைதான்! தினமும் ஓய்வில்லாமல் ஓடியாடி உழைத்தவர்களுக்கு வீட்டில் இருப்பது என்பது கடினம்தான். ஆனால் வேறு வழியில்லை! வீட்டில் உங்களை இருக்கச் சொல்வது உங்களது நன்மைக்காக, நாட்டுக்காக!
நாட்டுக்காக உழைப்பது மட்டுமல்ல; வீட்டில் இருப்பதும் ஒருவிதமான போராட்டம்தான். கொரோனாவை எதிர்க்கும் போராட்டம்! அதை வீட்டிற்குள் இருந்து நடத்துகிறோம். அவ்வளவுதான். நிறையப் படியுங்கள். எழுதுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள். பெற்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உற்சாகமாக கழியுங்கள்.
இந்த 21 நாள் அனுபவம் நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியைத்தான் தரும். மன கஷ்டத்தைத் தராது!
திரும்பத் திரும்ப உங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டிற்குள்ளேயும் தனித்தனியாக இருங்கள்! அதைக் கடைப்பிடித்தாலே கொரோனாவை வென்றுவிடலாம். உலக சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பதைப் பார்த்தேன்.
“இந்தியா இரண்டு மாபெரும் நோய்களை வென்றுவிட்டது. ஒன்று, பெரிய அம்மை; இன்னொன்று போலியோ. அதே போல இந்த கொரோனாவையும் இந்தியா நிச்சயம் வெல்லும்” என்று சொல்லி இருக்கிறார். அந்த தன்னம்பிக்கைதான் இப்போது நமக்குத் தேவை. தனித்திருப்போம்! விழித்திருப்போம்! கொரோனாவை வெல்வோம்!.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலினின் இந்த வேண்டுகோள் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story