உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவு: மேல்முறையீடு வேண்டாம் - மு.க. ஸ்டாலின்
உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை வரவேற்பதாகவும், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது என்றும், மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியைப் பெறுவதற்கான வலிமையின்றி, மக்கள் மீதே பழிபோட்டு, அண்டை மாநில எல்லைகளில் போய் வாங்குகிறார்கள் எனக் கூறி, தமிழ்நாட்டில் கடைகளைத் திறந்த நிலையில், முதல் நாளிலேயே எவ்வித சமூக ஒழுங்கையும் - தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் டாஸ்மாக் கடைகள் முன்பாக பெருங்கூட்டம் கூடியது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் மக்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து, கெடுபிடி காட்டிய காவல்துறை, டாஸ்மாக்கிற்கு வந்தவர்களையும் அவர்கள் வாங்கிய மது பாட்டில்களையும் பத்திரமாகப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட நேர்ந்த அவலத்தையும் தமிழ்நாடு பார்த்தது. மேலதிகாரிகளின் உத்தரவால் பெண் காவலர்களும் அவதிக்குள்ளாயினர்.
நோய்த் தொற்று அதிகமாகப் பரவுகிற சூழலில், ஊரடங்கு முடிவடையும்வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என திமுகவும், தோழமைக் கட்சிகளும் மே 7-ம் தேதி காலையில் கருப்புச் சின்னத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை சமூக ஒழுங்குடன் நடத்தியது.
டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு காலம் முடியும் வரை மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கு ஒன்றின் மீதான விசாரணையில், மக்களின் உயிர் நலன் மீது அக்கறை கொண்டு, அரசின் மோசமான செயல்பாட்டிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவை திமுக வரவேற்கிறது.
கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மக்களின் நலன் காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட்டு, மக்களின் உயிரைப் பணயம் வைக்காமல், ஊரடங்கினை நீர்த்துப் போகச் செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். .
Related Tags :
Next Story