கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு


கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 May 2020 8:37 PM IST (Updated: 21 May 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக மாற்று மையங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது.  தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

10ம் வகுப்புக்கான பொது தேர்வு ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், அந்த தேர்வு மையங்களுக்கு பதிலாக மாற்று தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  அந்த அறிவிப்பில், தேர்வறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்படுவர்.  அவரவர் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.  ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.  9.7 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

ஆசிரியர்கள், மாணவர்களின் உபயோகத்திற்காக 46.37 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும்.  பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் மாணவர்கள் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுதுவர்.  கொரோனா அதிகம் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மையங்களுக்கு பதிலாக மாற்று மையங்கள் அமைக்கப்படும்.  அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளான கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story