என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை “ஜெ.அன்பழகன் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்


என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை “ஜெ.அன்பழகன் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 10 Jun 2020 5:01 AM GMT (Updated: 2020-06-10T10:31:06+05:30)

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார்.  வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆரம்பத்தில் 90 சதவீத ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஆனால் அடுத்ததடுத்த நாட்களில் அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவையானது 40 சதவீதமாக குறைந்தது. இதனைத்தொடர்ந்து அவரின் உடலானது வெண்டிலேட்டர் உதவியில்லாமல் படிப்படியாகத் தேறி வந்தது.

இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் இழந்தார்.

என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், -இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், கருணாநிதியின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், சகோதரர் அன்பழகன் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்?

ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு கழகப்பணி - தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு - மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தைஎனத் தெரிவித்துள்ளார்."

எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தாருக்கு அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டு உள்ள இரங்கலில்

ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு;ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தி பேரிடியாக தாக்குகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்; அன்பழகன் மறைந்தார் என்பதை தாங்க முடியவில்லை என கூறி உள்ளார்.


Next Story