‘ஆன்-லைன்’ கல்வியை ஒழுங்குபடுத்த நிரந்தர திட்டம் உள்ளதா? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி


‘ஆன்-லைன்’ கல்வியை ஒழுங்குபடுத்த நிரந்தர திட்டம் உள்ளதா? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 10 Jun 2020 11:00 PM GMT (Updated: 2020-06-11T04:30:15+05:30)

‘ஆன்-லைன்’ கல்வியை ஒழுங்குபடுத்த நிரந்தர திட்டம் ஏதேனும் உள்ளதா? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், சரண்யா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் பள்ளிகள், ஆன்-லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன. ஆனால், தமிழகத்தை பொருத்தவரை 8 சதவீத வீடுகளில் மட்டுமே ‘இன்டர்நெட்’ இணைப்புடன் கம்ப்யூட்டர் உள்ளன. ‘டிஜிட்டல்’ முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற-கிராமப்புற மற்றும் ஏழை, பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. முறையான ‘டிஜிட்டல்’ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

‘ஆன்-லைன்’ மூலம் பாடங்களை நடத்துவதால் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ‘ஆன்-லைன்’ பாடங்களுக்காக மாணவர்கள் இணையதளங்களுக்குள் செல்லும்போது, அவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்கும் சூழலும் ஏற்படும். இதனால் மாணவர்கள் கல்வியில் செலுத்தும் கவனம் முழுவதும் சிதறிவிடும். எனவே மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி முறையான விதிகளை வகுக்காமல் ‘ஆன்-லைன்’ வகுப்புக்களை நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

தள்ளிவைப்பு

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஆன்-லைன்’ வகுப்புகள் சிக்கல் இல்லாமல் நடத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? ஏதாவது திட்டம் உள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு அரசு பிளடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மாநில அரசு பிரத்யேக கல்வி சேனல் வைத்துள்ளதாக கூறினார். இதையடுத்து நீதிபதிகள், கொரோனா வைரஸ் காரணமாக அனைத்துமே ‘ஆன்-லைன்’ முறையில் உள்ளது. ‘ஆன்லைன்’ கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story