அரசு ஆஸ்பத்திரியில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல் தம்பதி கைது


அரசு ஆஸ்பத்திரியில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல் தம்பதி கைது
x
தினத்தந்தி 13 Jun 2020 6:58 PM GMT (Updated: 13 Jun 2020 6:58 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வந்தபோது 8 மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்தவர் செல்வராணி (28). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு திருப்பூர் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் கிடைத்த வேலைகளை செய்துவிட்டு ரெயில்வே நடைபாதையில் கூடாரம் அமைத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

பிறப்பு சான்றிதழ்

இதைத்தொடர்ந்து செல்வம் நடைபாதையில் வசிக்காமல் குறைந்த வாடகையில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக செல்வத்துக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர், வேலைதேடி கடந்த 10-ந் தேதி கோவை ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது கோவையில் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்த திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் (35) மற்றும் அவருடைய மனைவி பிரபாவதி (30) ஆகியோர் அறிமுகம் செல்வத்துக்கு கிடைத்தது.

விக்னேஷ்-பிரபாவதி தம்பதிக்கு குழந்தை கிடையாது. அவர்கள் திருப்பூரில் நடைபாதையில் தங்கி வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க நேற்று முன்தினம் செல்வம் தனது மனைவியுடன் குழந்தைகளை எடுத்துக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது உதவிக்காக விக்னேஷ்-பிரபாவதி தம்பதியும் உடன் வந்தனர்.

ஜெராக்ஸ் எடுக்க சென்றார்

பின்னர் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததும், அங்குள்ள இருப்பிட மருத்துவ அதிகாரி அலுவலகம் அருகே அமர்ந்து இருந்தனர். பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக செல்வம் தனது ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்க சென்றார். அப்போது ஒரு குழந்தையை செல்வராணியும், மற்றொரு குழந்தையை பிரபாவதியும் வைத்திருந்தனர். பிரபாவதி அந்த குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.

குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் குழந்தைகளின் எடைஅளவு எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். எனவே தான் வைத்திருக்கும் குழந்தையின் எடையைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறியவாறு பிரபாவதி மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

குழந்தை கடத்தல்

பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற அவர்கள் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் மற்றும் செல்வராணி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். குழந்தையை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தையை கடத்தியது விக்னேஷ்- பிரபாவதி தம்பதி என்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் சென்ற போலீசார் அங்கு குழந்தையுடன் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் பிரபாவதி ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்து குழந்தையை மீட்டனர்.

Next Story