தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2020 7:45 PM IST (Updated: 18 Jun 2020 7:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 26,736 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் 123 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 115 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 40 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று பலியானவர்களில் 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 13 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..

தமிழகம் முழுவதும் இன்று 1,017 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,641 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 23,065 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story