தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் பதவி ஏற்கிறார்


தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 1 July 2020 3:45 AM IST (Updated: 1 July 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேற்று திடீரென்று மாற்றப்பட்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜெயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் பொறுப்பு ஏற்கிறார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 2 பேரையும் அடித்து கொலை செய்ததாக சாத்தான்குளம் போலீசார் மீது புகார் எழுந்து உள்ளது. இதையடுத்து அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய போலீசார் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு புதிதாக இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேற்று திடீரென்று மாற்றப்பட்டார்.

அவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக எஸ்.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார்.

தென்மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய கே.பி.சண்முக ராஜேஸ்வரன் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக எஸ்.முருகன் தென்மண்டல ஐ.ஜி.யாக பதவி ஏற்கிறார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ள எஸ்.ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வந்தார். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக ஏற்கனவே சிறப்பாக பணியாற்றியவர். சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவில் துணிச்சலாக செயலாற்றியவர். இவர் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பது தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு பல வகைகளிலும் வலிமையை பெற்றுத்தரும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

ஐ.ஜி. முருகனும் சி.பி.ஐ.யில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏற்கனவே நெல்லை சரக டி.ஐ.ஜி.யாகவும், தெற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். முக்கியமான காலக்கட்டத்தில் முருகன் இந்த பொறுப்பை ஏற்று இருப்பதும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.

Next Story