சாத்தான்குளம் சம்பவம்: அரசு டாக்டர்-பெண் போலீசிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை


சாத்தான்குளம் சம்பவம்: அரசு டாக்டர்-பெண் போலீசிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
x
தினத்தந்தி 2 July 2020 2:46 AM IST (Updated: 2 July 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அரசு டாக்டர், பெண் போலீசிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

திருச்செந்தூர்,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, விசாரிப்பதற்கு மதுரை ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று காலையில் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணையை தொடங்கினார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைப்பதற்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா மருத்துவ சான்றிதழ் வழங்கி இருந்தார். இதுதொடர்பாக, விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 4.40 மணி வரையிலும் நடந்தது. பின்னர் உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற டாக்டர் வெண்ணிலா மீண்டும் மாலை 5.35 மணிக்கு விசாரணைக்காக திரும்பி வந்தார். அவரிடம் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி மதியம் 3.45 மணி அளவில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து அரசு டாக்டர் வெண்ணிலா, பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி ஆகியோரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

Next Story