மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா; ஆஸ்பத்திரிகளில் அனுமதி


மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா; ஆஸ்பத்திரிகளில் அனுமதி
x
தினத்தந்தி 3 July 2020 5:15 AM IST (Updated: 3 July 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி, உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரமக்குடி,


கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மருத்துவ பணியாளர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே தி.மு.க.வை சேர்ந்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உயிரை கொரோனா பறித்து விட்டது. இதை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தான், செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பரமக்குடி எம்.எல்.ஏ.

இந்த நிலையில் மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் (வயது 48). மற்றொருவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுரு (59).

இது பற்றிய விவரம் வருமாறு:-

பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காய்கறி தொகுப்புகள் போன்ற நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த அவர் தானாகவே கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் தொற்று இல்லை என முடிவு தெரியவந்தது.

இந்த நிலையில் அவருடன் கட்சி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சதன்பிரபாகர் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த 10 பேர் கடந்த 30-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

அதன் முடிவு நேற்று காலை வெளியானதில் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ., அவருடைய 17 வயது மகன் மற்றும் 40 வயது உதவியாளர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதை தொடர்ந்து 3 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.வுக்கும், அவருடைய மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மூடப்பட்டது.

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, எடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். மேலும் அரசு அதிகாரிகளை சந்தித்து மக்கள் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உளுந்தூர்பேட்டையில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் குமரகுரு எம்.எல்.ஏ. கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உளுந்தூர்பேட்டை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து எடைக்கல்லில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் சாலையின் குறுக்கே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. இது தவிர எம்.எல்.ஏ.வின் மனைவி, மகன் மற்றும் அவரது உறவினர்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story