திருச்சியில் சிறுமி உயிரிழந்த சம்பவம்; தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை


திருச்சியில் சிறுமி உயிரிழந்த சம்பவம்; தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
x
தினத்தந்தி 7 July 2020 3:16 PM IST (Updated: 7 July 2020 3:16 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி (வயது 14). எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 12 மணியளவில் சக தோழிகளுடன் விளையாடினாள்.  பின்னர் வீட்டுக்கு சென்ற அவள், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு முள்காட்டில் கொட்ட சென்றாள். அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சிறுமியின் உடல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது . பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது 6 தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் 6 வது முறையாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story