சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்


சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 July 2020 5:58 PM IST (Updated: 7 July 2020 5:58 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழக அரசு சார்பாக சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு மருத்துவமனையில் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளை முதல் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலும் சிடி ஸ்கேன், எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் உள்ளது. அதில் 300 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்காக 20 வெண்டிலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் 30 பேர் அமர்ந்து படிக்கும் வசதி கொண்ட நூலகம், 20 பேர் ஒரே நேரத்தில் டிவி பார்க்கும் வசதி, காணொலி காட்சி மூலம் யோகா பயிற்சி செய்யும் வசதி மற்றும் வைபை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Next Story