மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா: அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு பரவுவதால் பீதி + "||" + Corona to Minister Selur Raju: Panic spreads to successive ministers

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா: அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு பரவுவதால் பீதி

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா: அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு பரவுவதால் பீதி
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சருக்கும் கொரோனா உறுதி ஆனது. அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதால் பீதி ஏற்பட்டு உள்ளது.
சென்னை, 

இந்தியாவில் மராட்டியத்தை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3,680 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,205 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால், நகரில் கொரோனா பாதிப்பு 74,969 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் நேற்று சென்னையைச் சேர்ந்த 27 பேர் உள்பட மொத்தம் 64 பேர் மரணம் அடைந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்தது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அரசியல் பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

ஏற்கனவே, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை

மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியிலும், அமைச்சர் பி.தங்கமணி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னும் குணம் அடையாத நிலையில், தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மியாட் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று வந்தார்.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவு நேற்று காலை வெளிவந்தது. அதில், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரும் உடனடியாக மியாட் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவார்.

இது மற்ற அமைச்சர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். எனவே அவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது?, அவரை சந்தித்த வேறு யாருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணம் அடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பொதுப் பணியில் ஈடுபடும் அனைவரும் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்“ என்று கூறி உள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், “கோவிட் 19 சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும். எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்து இருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி) கடந்த மாதம் உயிர் இழந்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சதன் பிரபாகர் (பரமக்குடி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), அம்மன் அர்ச்சுனன் (கோவை தெற்கு) ஆகியோருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி. அரசு (செய்யார்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் செய்தியை அறிந்த உடன் செல்லூர் ராஜூவை மதியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரும் விரைவில் பூரண குணமடையவேண்டும் என்ற எனது பிரார்த்தனையையும் அவரிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.