ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு: சேலம், அரியலூர் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது - கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஊழியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மூடப்பட்டன. இதையொட்டி அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பரிசோதனை செய்து கொள்ள கலெக்டர் ராமன் உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நுழைவு வாயிலில் உள்ள மெயின் கதவு பூட்டப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
கலெக்டர் அலுவலகத்தில் 4 தளங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் களப்பணியாளரான 32 வயதுடைய ஒருவருக்கும், அவரது மனைவியான மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 30 வயதுடைய சார்பதிவாளருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த களப்பணியாளர் பங்கேற்றுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முதல் 3 நாட்களுக்கு அரியலூர் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதையும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தனர்.
Related Tags :
Next Story