முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி; புதிய அரசாணை வெளியீடு


முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி; புதிய அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 31 July 2020 7:12 PM GMT (Updated: 2020-08-01T00:42:23+05:30)

முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதி அளித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தன்னிகரில்லா தலைவர்களையும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர் பெருமக்களை புகழவும், அவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.

தற்போது கொரோனா மேலும் பரவாமல் இருக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் விதித்துள்ளது. இந்தநிலையில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் மட்டுமே உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மாலை அணிவிக்க அவ்வப்போது அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களிலும் தலைவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக தற்போது அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் (5 பேருக்கு மிகாமல்) அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் (5 பேருக்கு மிகாமல்) சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன் அனுமதி மற்றும் வாகனத்துக்கான அனுமதியைப் பெற்று உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story