கொளத்தூர் தொகுதியில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க ரூ.10 லட்சம்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கொளத்தூர் தொகுதியில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க ரூ.10 லட்சம்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Aug 2020 10:15 PM GMT (Updated: 2020-08-04T02:01:32+05:30)

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க மு.க.ஸ்டாலின் 2-ம் கட்டமாக ரூ.10 லட்சத்தை சமையல் கலைஞர்களிடம் வழங்கினார்.

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின்படி, ‘ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை அறிவித்தார். கடந்த மாதம் 18-ந்தேதி கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிகாகுளம் பகுதியில் முதல்கட்டமாக சமையல் கலைஞர்களிடம் ரூ.10 லட்சத்தை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக ரூ.10 லட்சத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமையல் கலைஞர்களிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை மக்களின் பசியை போக்கும் இத்திட்டத்துக்கான முழு செலவுகளையும் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு உள்ளார். அப்போது கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் ஐ.சி.எப்.முரளி, தலைமை கழக வக்கீல் கே.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

மரணம் அடைந்த சென்னை தெற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் திருவாரூர் கந்தசாமியின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.9 லட்சத்தை அவரது மனைவியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story