மனைப்பிரிவு, கட்டிடம் தொடர்பான விண்ணப்பங்களுக்கு காலதாமதம் இன்றி அனுமதி - அதிகாரிகளுக்கு, ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு


மனைப்பிரிவு, கட்டிடம் தொடர்பான விண்ணப்பங்களுக்கு காலதாமதம் இன்றி அனுமதி - அதிகாரிகளுக்கு, ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2020 9:26 PM GMT (Updated: 17 Aug 2020 9:26 PM GMT)

மனைப்பிரிவு மற்றும் கட்டிடம் சம்பந்தப்பட்ட மக்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து காலதாமதமின்றி விரைந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும கூட்டரங்கில், நகர் ஊரமைப்பு துறையின் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறப்பித்தார். கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு சம்பந்தமான விண்ணப்பங்களை காலதாமதமின்றி விரைந்து அனுமதி வழங்குவதற்கு உரிய நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து விடுபட்ட விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் தேவை ஏற்பட்டால் மட்டும் மின்னஞ்சல் மூலமாக மனுதாரருக்கு தெரிவித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால், மனுதாரருடன் நேரில் கலந்தாய்வு செய்வதற்கு ஒரு வாய்ப்பளித்து விடுபட்ட விவரங்களை விரைந்து பெற்று உரிய கால கெடுவிற்குள் தீர்வு செய்யப்பட வேண்டும் என்று துறை அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

மேலும், நகர் ஊரமைப்பு துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட 15 மாவட்ட அலுவலக பணிகளை எவ்வித தொய்வுமின்றி துரிதமாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, நகர் ஊரமைப்புத் துறையின் இயக்குநர் (பொறுப்பு) பா.முருகேஷ் மற்றும் நகர் ஊரமைப்புத் துறை தலைமையிட உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story