22-ந் தேதி சதுர்த்தி: விநாயகர் சிலைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்


22-ந் தேதி சதுர்த்தி: விநாயகர் சிலைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்
x
தினத்தந்தி 19 Aug 2020 10:45 PM GMT (Updated: 2020-08-20T04:10:52+05:30)

விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொசப்பேட்டையில் போலீசார் கடைகளை அடைக்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி வருகிற 22-ந் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட பா.ஜ.க. உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் சிலை வழிபாடுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதனால் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருக்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். அதே நேரத்தில், வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இது வியாபாரிகளுக்கு சிறு நம்பிக்கையை விதைத்துள்ளது. இதனால் நகரில் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

வீர விநாயகர், கல்வி விநாயகர், விவசாயி விநாயகர், தலைப்பாகை விநாயகர், வஜ்ர விநாயகர், வெற்றி விநாயகர், செல்வ விநாயகர், ஐஸ்வர்ய விநாயகர், குபேர விநாயகர், ஒய்யார விநாயகர், யானைத்தேர் பூட்டிய விநாயகர் என பல விதங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.30 முதல் ரூ.2 ஆயிரம் வரை அவரவர் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

நீரில் கரையும் விநாயகர் சிலைகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் நுங்கம்பாக்கம், அமைந்தகரை, தேனாம்பேட்டை, கொசப்பேட்டை, தியாகராயநகர், சாலிகிராமம், செங்குன்றம் உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.

சென்னை கொசப்பேட்டையில் அருணாச்சலம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் விநாயகர் சிலைகள் அதிக அளவுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் இருப்பதால், கடைகளை அடைக்க கூறினர். இதனால் வியாபாரிகள்-போலீசார் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு விநாயகர் சிலைகளை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்றனர்.

Next Story